பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் உன்னதமான திட்டம்
தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை மாணவர்களின் நலனுக்காகச் செயல்படுத்தி வருகிறது. இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், மழையாடைகள் உள்ளிட்டவற்றோடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களையும் வழங்குகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உயர்வுக்குப் படி திட்டம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான முயற்சியாகும்.
பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது, சரியான வழிகாட்டுதலுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை அங்கீகரிக்கிறது.
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் அர்த்தமுள்ள உயர்கல்விப் படிப்புகளைத் தொடர அதிகாரம் அளிப்பதாகும்.
தமிழ்நாட்டின் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தற்போதுள்ள 51 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையாகும். இத்திட்டம் முக்கியமான பணிகளின் தொகுப்பால் வழிநடத்தப்படுகிறது.
கடமை: 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள சுமார் 23 லட்சம் மாணவர்களைக் கொண்ட ஒவ்வொரு குழுவையும், அவர்கள் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்குத் தேவையான தகவல்களோடு வழிகாட்டுதலின் மூலம் அவர்களின் உயர்கல்வி மற்றும் வாழ்க்கைப் பாதைகள் குறித்து முடிவுகளை எடுக்க வழிகாட்டுதல்.
சுய கண்டுபிடிப்பு: மாணவர்கள் தங்கள் சொந்த ஆர்வங்கள் மற்றும் திறன்களை ஆரம்ப நிலையிலேயே புரிந்து கொள்ள உதவுதல், நீண்ட காலத்திற்கு அவர்களின் தொழில் வாழ்க்கையின் அடித்தளமாகச் செயல்படும் வலுவான அடித்தளத் திறன்களை வளர்ப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளித்தல்.
தொழில் வழிகாட்டல்: 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கல்வி காலண்டரில் தொழில் வழிகாட்டுதலை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த வளரும் ஆண்டுகள் இளமைப் பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. இது சமூக வாழ்க்கைத் திறன்கள், விமர்சன சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு அதிகாரமளித்தல்.
தடையற்ற உயர்கல்வி :
மாணவர்கள் வெற்றிகரமாகப் பட்டம் பெறும் வரை கண்காணிப்பு மற்றும் ஆதரவை எளிதாக்குவதற்கு உயர்கல்வித் துறையுடன் ஒத்துழைத்து, உயர்கல்விக்கான அணுகல் சீராகவும் ஆதரவாகவும் இருப்பதை உறுதிசெய்தல். ஆகிய நோக்கங்களைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு உரிய முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென ஒரு வழிகாட்டி நூல் தயாரிக்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேற்கண்ட பொருண்மைகள் சார்ந்த காணொலிக் காட்சிகள் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு அது குறித்து விவாதிக்கப்படுகிறது. மாணவர்களிடையே இந்தத் திட்டம் குறித்த தெளிவு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவ்வப்போது இணைய வழித்தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. கல்வியின் மீது அக்கறை இல்லாதவர்களுக்கும் இத்திட்டத்தின் வாயிலாக உயர்கல்வி பயில வேண்டும் என்கிற ஆர்வத்தை உறுதியாக ஏற்படுத்துகிறது. பதின் வயதில் மாணவர்களுக்குத் தங்களின் எதிர்காலம் குறித்து தெளிவான முடிவெடுப்பதில் குழப்பம் நிலவுவது இயற்கை. அவர்களிடம் ஏற்படும் எல்லா வகையான குழப்பங்களையும் தெளிவுபடுத்தி என்னென்ன வாய்ப்புகள் எந்தெந்தத் துறைகளில் யார் யாருக்குக் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்துவதன் மூலமாக. அவர்கள் முதலில் தங்களை உணர்ந்து கொள்வதோடு தங்களுக்கு ஏற்ற கல்வி வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கச் சரியான வழிகாட்டுதலை இந்த திட்டம் வழங்குகிறது.
உயர்கல்விக்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக கல்வி உதவித்தொகைகள் எந்தெந்த நாடுகளில் என்னென்ன படிப்புகளுக்கு வழங்கப்படுகின்றன ,நம் நாட்டில் என்னென்ன உதவித்தொகைகள் உள்ளன, உயர்கல்விக்கான நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை எல்லாம் மாணவப் பருவத்திலேயே தெளிவுபடுத்துவதன் வாயிலாக அவர்கள் உயர்கல்வி பெறுவதை மிகவும் எளிதாக்கிவிடுகிறது இந்தத் திட்டம்.
உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு பல பயிற்சிகள் இந்தத் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொருவரும் தன்னைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்கும் மற்றவர்களோடு இணக்கமாகப் பழகுவதற்கும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தும் 10 வகை வாழ்க்கைத் திறன்கள் குறித்தும் தெளிவாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சிகள் ஒன்பதாம் வகுப்பில் தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பில் முடிகின்றன. இந்த நான்கு ஆண்டுகளில் மாணவர்கள் பெரும் பயிற்சி தங்களின் உயர்கல்வி குறித்து தெளிவான முடிவெடுப்பதற்கு வழி வகுக்கிறது. தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன் கருதி கொண்டுவந்துள்ள திட்டங்களில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உயர்கல்விக்கு வழிகாட்டும் உயர்வுக்குப் படி என்ற திட்டம் நிச்சயம் வரவேற்கப்பட
வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.