தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திட்டமிடும் திறனை பட்டை தீட்டும் பல்லாங்குழி விளையாட்டு!

இன்றைய இளைய தலைமுறையினர் பொழுதுபோக்குக்காக செல்போனில் ரீல்ஸ், இன்ஸ்டாகிராம், சீஸ் பயர் கேம் என்று பல்வேறு விதமாக மூழ்கி நேரத்தை விரயமாக்குவதோடு உடல் நலத்தையும் வீணாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், நம் அன்றாட வாழ்க்கை முறையில் அறிவுத்திறனையும், உடல் பலத்தையும் தரக்கூடிய பல விளையாட்டுகள் இருந்தன. உதாரணமாக தாயம், நொண்டி, கபடி, கண்ணாமூச்சி, சிலம்பம் என பலவற்றை சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் மறைந்துபோன விளையாட்டுகளாக ஆகிவிட்டன. கிராமப்புறங்களில் கூட செல்போன்களின் தாக்கம்தான் அதிகமாக உள்ளது. அப்படி மறைந்துபோன விளையாட்டுகளில் ஒன்றுதான் பல்லாங்குழி விளையாட்டு.

Advertisement

பல்லாங்குழி ஆட்டம்

ஏழேழும் பதினாலு சோலை

இருபக்கம் தச்சருடைய வேலை

இதை விடுவித்தோருக்கு

நவரத்தின மாலை - அது என்ன?- என்று ஒரு விடுகதை உண்டு.

இதற்கான விடை, சிற்றூர்களில் வாழும் அனைவரும் அறிந்ததே. இந்த விளையாட்டின் தலைப்புதான் அது.

பெயர்க் காரணம்: ஒரு பக்கத்துக்கு ஏழு என இரு பக்கங்களிலும் பதின் நான்கு குழிகளை உடைய மரப்பலகையாலான விளையாட்டுக் கருவி தான் பல்லாங்குழி. பதின் நான்கு குழி என்ற சொல் மருவி பல்லாங்குழி என்றானது. இதனை பன்னாங்குழி, பள்ளாங்குழி என்றும் குறிப்பிடுவர். பெரும்பாலும் சிறுமியர் இருவர் ஆடுவர். சிறுவர், சிறுமியர் இணைந்தும் ஆடுவதுண்டு. ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர் சிறுமியர் மரத்தடியில் குழிகளைத் தோண்டி பல்லாங்குழி விளையாடுவது உண்டு. விளையாடுவதற்கு ஏதுவாக தச்சர் செய்த மரப் பல்லாங்குழியைப் பயன்படுத்துவர்.

விளையாடும் காலம்: சித்திரை, வைகாசி மாதங்களில் அறுவடையாகும். அப்போது இந்த விளையாட்டு, பெரும்பாலான சிறுவர்களால் ஆடப்படும். குழியில் புளியங்கொட்டையை இட்டு விளையாடுவர் என்பதால் இந்த பருவ காலத்தில் இது ஆடப்படுகிறது. சிறுமியர் இருவர் எதிரெதிராக அமர்ந்து கொண்டு, நடுவில் பல்லாங்குழியை வைத்துக்கொண்டு, ஒரு குழிக்கு ஐந்து காய்கள் வீதம் தன் பகுதியிலுள்ள ஏழு குழிகளையும் நிரப்பிட வேண்டும்.

விளையாடும் முறை: முதலில் ஆட்டத்தைத் தொடங்குபவர், தன் பகுதியிலுள்ள ஏழு குழிகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து ஐந்து காய்களையும் எடுத்து, அதற்கு வலப்புறம் உள்ள குழிகளில் குழிக்கு ஒரு காய் வீதம் போட்டுச் செல்ல வேண்டும். அதன் பிறகு, ஆறாவது குழியில் உள்ள காய்களை எடுத்து அதே வசத்தில் குழிக்கு ஒன்று என இட வேண்டும். இவ்வாறு இடும்போது, கடைசி குழிக்கும் அடுத்த குழி காலியாக இருந்தால், அதனைக் கையால் துடைத்துவிட்டு, அடுத்த குழியிலிருக்கும் காய்களை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு ஒருவர் எடுத்த பின்பு, எதிரில் இருப்பவர் ஆட்டத்தைத் தொடர வேண்டும். காலியான குழிகளில் காய்கள் நிரம்பும்போது, அதில் நான்கு சேர்ந்ததும், குழிக்கு உரியவர் எடுத்துக்கொள்ளலாம். நான்கு காய்கள் ‘முத்து’ எனக் குறிப்பிடப்படும்.

இந்த ஆட்டத்தில் அதிக காய்களைச் சேகரித்தவர் வென்றவராவார். எதிரில் இருப்பவரின் குழிகளை வெறுமையாக்கினால் அவரை ‘கஞ்சி காய்ச்சி விட்டதாக’வென்றவர் குறிப்பிடுவார். ஓர் ஆட்டம் முடிந்ததும் அவரவர் கைகளிலுள்ள காய்களைக் கொண்டு குழிகளை மீண்டும் நிரப்ப வேண்டும்.

ஒரு குழிக்கு ஐந்து என ஏழு குழிகளையும் நிரப்பியது போக, மீதமிருக்கும் காய்களை வைத்திருப்பார் ஒருவர்; மற்றொருவர் நிரப்பக் காய்களின்றி ஒரு சில குழிகளை வெறுங் குழிகளாக வைத்திருப்பார். அப்படி வெறும் குழிகள் இருப்பின், அந்தக் குழிகளில் சிறு துரும்பைக் கிள்ளி இட்டு வைப்பர். அந்தக் குழிகள் ‘பீத்தை’எனக் குறிப்பிடப்படும்.

ஒரு சில வேளைகளில் ஒருவரிடம் மிகக்குறைந்த காய்கள் இருந்தால், குழிக்கு ஒன்று வீதம் நிரப்பி விளையாடுவதும் உண்டு. புதிதாக இந்த ஆட்டத்தைத் தொடங்குபவர்கள் எளிதில் வெல்ல முடியாது. விளையாடிய அனுபவம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். ஏனெனில், பலமுறை விளையாடிய பட்டறிவு இருந்தால்தான், முதலில் எந்தக் குழியிலுள்ள காய்களை எடுத்து ஆட்டத்தைத் தொடங்கினால் வெற்றி கிட்டும் என்பதை உணரமுடியும்.

இந்த ஆட்டத்தில் வெற்றி, தோல்வி மாறி மாறி வரும். ஒரு ஆட்டத்தில் தோற்றவர் திறமையாக ஆடினால், அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியும். எனவே, கணக்கீடு என்பது இந்த ஆட்டத்திற்கு இன்றியமையாதது.

வட்டார வகைகள்: பல்லாங்குழியில் பலவகை ஆட்டங்களை வட்டாரத்துக்கு ஏற்ப விளையாடுகின்றனர். முத்துப்பாண்டி, எதிர்பாண்டி, ராசாப்பாண்டி, காசிப்பாண்டி, கட்டுப்பாண்டி, சீதைப்பாண்டி, தள்ளுப்பாண்டி என ஏழு வகைகள் உள்ளன. இவற்றுக்கு இடையே சிறுசிறு வேறுபாடுகள் தான் இருக்கின்றன.

முத்துப்பாண்டி என்ற வகைதான் பெரும்பாலானோர் விளையாடுவது. எதிர்பாண்டி என்பது, காய்களைத் துடைத்து எடுக்கும்போது எதிரிலுள்ள குழியிலிருந்தும் காய்களை எடுப்பர். ராசாப்பாண்டி என்பது, மூவர் ஆடுவது. ஒருவர் ராசாவாகக் கருதப்படுவார். அவருக்கு நடுவில் உள்ள மூன்று மூன்று குழிகள் என, மொத்தம் ஆறு குழிகள் ஒதுக்கப்படும். மீதமுள்ள இரண்டு மந்திரிகளுக்கும் தலா எஞ்சிய நான்கு குழிகள் உரிமையாகும். இதில் ராசாதான் ஆட்டத்தை முதலில் தொடங்க வேண்டும். பக்கத்துக்கு ஒரு குழியில் காய் நிரப்பாமல் விட்டு மற்ற ஆறு குழிகளில் மட்டும் காயை நிரப்பி ஆடுவது காசிப்பாண்டி. நிரப்பாமல் உள்ள குழி ‘காசிக்குழி’ எனப்படும்.

மூலைக் குழியினை முதலில் பிரித்தாடி, மீண்டும் அந்தக் குழியில் மூன்று காய்கள் சேர்ந்ததும் அதனை எடுக்காமல், பக்கத்துக் குழியிலும் அடுத்த குழியிலும் காய்களை இட்டு, மூலைக் குழியை கட்டுவது கட்டுப்பாண்டி.

முதல் குழியில் ஏழு காய்களையும், அடுத்து ஆறு, ஐந்து என வரிசையாக வந்து, கடைசிக் குழியில் ஒரு காயை மட்டும் நிரப்பி ஆடுவது சீதைப்பாண்டி. ஒரு குழியிலுள்ள எல்லா காய்களையும் அடுத்த குழிக்கு தள்ளி ஆடுவது தள்ளுப்பாண்டி. மேற்குறிப்பிடப்பட்ட ஏழு வகைகளில், முதல்வகை ஆட்டமே அதிகமாக விளையாடப்படுகிறது. பல்லாங்குழி ஆட்டம் ஆப்பிரிக்கா நாட்டிலும் விளையாடப்படுவதாகத் தெரிகிறது.

பல்லாங்குழி ஆட்டத்தின் பயன்கள்: இந்த ஆட்டம் சிறுவர் சிறுமியரிடையே கணக்கிடும் ஆற்றலை வளர்க்கிறது. ஒரு செயலைச் செய்வதன் பலனாக என்ன விளையும் என்ற பட்டறிவை ஏற்படுத்துகிறது. வெற்றி பெற வேண்டுமெனில் எதைச் செய்ய வேண்டும்; எதைச் செய்யக்கூடாது என்று திட்டமிடும் அறிவுத்திறனை சிறுவயதிலேயே கற்கவும், பட்டை தீட்டவும் இந்த ஆட்டம் துணைபுரிகிறது. மேலும் வெற்றி தோல்வி நிரந்தரமல்ல என்ற பக்குவத்தையும் சிறுவர் மனத்தில் தோற்றுவிப்பதாகப் பல்லாங்குழி ஆட்டம் அமைந்துள்ளது.

- புகழேந்தி

Advertisement