மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்: மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு செயற்கை கால் பொருத்தி அழகு பார்த்த மாவட்ட ஆட்சியர்
மதுரை: மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு செயற்கை கால் பொருத்திய அடுத்த நொடியே அந்த மாணவனின் கையை பிடித்து நடக்க வைத்து அழகு பார்த்த ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை புகார் மனுவாக அளித்தனர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலன் துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செயற்கை கால்களை வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவருக்கு செயற்கை கால் வழங்கினார். அந்த மாணவனுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்ட அடுத்த நொடியே அந்த மாணவனை தான் கையால் பிடித்து நடக்க வைத்து அழகு பார்த்தார். அதுமட்டுமின்றி மாணவன் முகத்தில் வெளிவந்த அளவற்ற அந்த சிரிப்பை பார்த்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அந்த மாணவரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து செயற்கை கால்களை வாங்க வந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களிடம் உங்களுக்கு உதவி தொகை வருகிறதா என கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காத நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அதற்கு மாற்றுத்திறனாளி அலுவலர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளி மாணவருக்கு செயற்கை கால் வழங்கியது மட்டுமின்றி அவரது கையை பிடித்து நடக்க வைத்து அழகு பார்த்த ஆட்சியரின் செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.