தடுப்பு சுவரில் மோதி காரில் பயங்கர தீ: 8 பேர் உயிர் தப்பினர்
திருமலை: ஐதராபாத் அருகே தடுப்பு சுவரில் மோதி பல்டி அடித்து கார் தீப்பிடித்தது. இதில் 8 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குகட்பள்ளியை சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை விஜயவாடா நோக்கி காரில் புறப்பட்டனர். நல்கொண்டா மாவட்டம் சித்யாலா அடுத்த குண்ட்ராம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்பு சுவரில் மோதி பல்டி அடித்து கவிழ்ந்தது. இதில் காரின் பெட்ரோல் டேங்கரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. உடனே காரில் இருந்தவர்கள் கீழேகுதித்து உயிர் தப்பினர்.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் காரை போலீசாரும், நெடுஞ்சாலை ஊழியர்களும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.