சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து: பயணிகள் தவிப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 4.25 மணிக்கு புனேயில் இருந்து சென்னை வரும் விமானம், காலை 9.40 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானம், பகல் 1.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் விமானம், இரவு 8.55 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
அதுபோல், சென்னையில் இருந்து நள்ளிரவு 12.10 மணிக்கு புனே செல்ல வேண்டிய விமானம், காலை 6 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 10.10 மணிக்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம், இரவு 9.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 4 வருகை, 4 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த விமானங்கள் ரத்துக்கான காரணங்கள் எதுவும் பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.