86 மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வைப்புநிதி பத்திரங்கள்
*கலெக்டர் வழங்கினார்
தர்மபுரி : தர்மபுரியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 86 மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டு வைப்புநிதி பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக அதியன் கூட்டரங்கில், பொதுமக்களுக்கான வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன் அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 502 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அவற்றை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி, அரசின் விதிகளுக்கு உட்பட்டு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் வருவாய் ஈட்டும் தாய், தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டமான விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற்ற 86 மாணவ, மாணவிகளுக்கு ‘விபத்துக் காப்பீட்டு வைப்புநிதி’ பத்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
அதேபோல, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பங்கேற்று பல்வேறு போட்டிகளில் 1 தங்கம், 6 வெண்கலப் பதக்கங்களை பெற்ற வீரர், வீராங்கனைகள் கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும், கடந்த 23ம் தேதி அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 3 மாணவர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் 6 பேருக்கு கலெக்டர் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தனித்துணை கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன், உதவி ஆணையர்(கலால்) நர்மதா, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.