11,824 விவசாயிகளிடமிருந்து 85,287.160 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
*அரசு முதன்மை செயலர் தகவல்
வடலூர் : உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் சத்திய பிரதாசாகு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட குண்டியமல்லூர் மற்றும் ஐயந்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அரசு முதன்மை செயலாளர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடப்பு குறுவை பருவத்தில் 200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 11,824 விவசாயிகளிடமிருந்து 85,287.160 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யும்போது நெல்லுக்கு அரசு நிர்ணயித்துள்ள அளவின்படி ஈரப்பதம் குறித்து கணக்கீடு செய்யவும், பதிவு மற்றும் கொள்முதல் குறித்து வெளிப்படை தன்மையுடன் எவ்வித பாகுபாடின்றி பதிவேடுகளை பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள் கடலூர் கமலம், திண்டுக்கல் சிற்றரசு, கரூர் மோகன், தேனி பாலமுருகன், துணை மேலாளர் விஸ்வநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.