உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதானவர்களால் ஏற்படுகிறது: டிரம்பை கலாய்த்த ஒபாமா
லண்டன்: ‘உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதானவர்கள் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதால் ஏற்படுகிறது’ என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறியிருப்பது பரபரப்பாகி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை அதிபராக இருந்த பாரக் ஒபாமா (67), இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அளித்த பேட்டி ஒன்றில் 77 வயதான தற்போதைய அதிபர் டிரம்பை மறைமுகமாக குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்பின் கொள்கைகள், அறிவிப்புகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஒபாமா பேட்டியில் கூறியிருப்பதாவது: உலகில் 80 சதவீத பிரச்னைகள் வயதான ஆண்கள் அதிகாரத்தில் தொங்கி கொண்டிருப்பதால் ஏற்படுகிறது. பிரமிடுகள் உட்பட எல்லாவற்றிலும் தங்கள் பெயரை பொறிக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்படுகிறார்கள். மரணத்திற்கும், முக்கியத்துவமின்மைக்கும் அஞ்சுகிறார்கள். தங்கள் கவனிக்கப்படாமல் போய்விடுமோ, தங்களைப் பற்றி எதிர்காலம் பேசாமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே பல பாதகமான முடிவுகளை எடுக்கின்றனர். ஓவல் அலுவலகத்தில் எனது வாரிசு, பாராசிட்டமல் மாத்திரைகளை உட்கொள்வதால் குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்புடன் பிறப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது பொது சுகாதாரத்தை எந்த அளவிற்கு குறைமதிப்பிற்கு உட்படுத்தும், கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும், மன இறுக்கம் உள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோருக்கு பதட்டத்தை உருவாக்கும். இது உண்மைக்கு எதிரான வன்முறை. அமெரிக்காவை குறிப்பிட்ட சிந்தனையை நோக்கி திசை திருப்ப பார்க்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் ‘நாம், நமது மக்கள்’ என பேசுவது சில மக்களை மட்டுமே. எல்லா மக்களையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
இவ்வாறு ஒபாமா பேசி உள்ளார்.