காற்று மாசு மேலும் மோசமடைந்து வருவதால் டெல்லியை காலி செய்ய 80% மக்கள் முடிவு: மருத்துவ செலவு அதிகரிப்பால் கடும் திணறல்
புதுடெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக 80 சதவீத மக்கள் நகரை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறியுள்ளது. காற்று தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ என்ற அளவில் நீடிப்பதால், கட்டுமானப் பணிகளுக்குக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றமும், ‘காற்று மாசை ஒரே நாளில் கட்டுப்படுத்த எங்களிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை’ என்று கருத்து தெரிவித்திருந்தது. இருப்பினும் நிலைமை சீராகாததால், தற்போது கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
இந்நிலையில், டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வின்படி, ‘கடந்த ஓராண்டில் மட்டும் 68.3 சதவீத மக்கள் காற்று மாசால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவியை நாடியுள்ளனர். 85 சதவீத குடும்பங்களின் மருத்துவச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்’ என்று தெரியவந்துள்ளது. மேலும், 80 சதவீத மக்கள் தொடர் இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்து, 76 சதவீத மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக, 15 சதவீத மக்கள் ஏற்கனவே நகரை காலி செய்துவிட்டதாகவும், மீதமுள்ளவர்களில் 80 சதவீதத்தினர் மலைப்பிரதேசங்கள் அல்லது சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.