விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், தளவாய்புரம் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த திருநங்கைகள் இளவஞ்சி (24), அபர்ணா (24), நாகம்மாள் (55), ஆசிர்வாதம் (19), இதழ் (23), அல்வா (22), அபூர்வா (22), இந்துஜா (24) ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது திடீரென நாகம்மாள் தவிர 7 பேரும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். திருநங்கைகள் கூறுகையில், ‘‘தளவாய்புரம் அருகில் உள்ள ரெங்கநாதபுரத்தில் 8 பேரும் சேர்ந்து சொந்தமாக ஒரு வீடு வாங்கி வசித்து வருகிறோம். வயிற்று பிழைப்பிற்கு இரு மாடுகள் வாங்கி வீட்டின் அருகில் கூரை செட் அமைத்து வளர்த்து வருகிறோம். கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் விநாயகர் கோயில் இருப்பதால் கூரை செட்டை அகற்றுமாறுக் கூறினர். இதுதொடர்பாக தளவாய்புரம் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தோம். எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’’ என தெரிவித்தனர்.