காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு; நிலச்சரிவுகளில் சிக்கி 7 பேர் பலி
ஜம்மு: காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில், கடந்த 14ல் திடீர் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சிசோட்டி கிராமத்தை ஒட்டிய மலைப்பாதையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடைகள், வீடுகள், ஓட்டல்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.மேலும் 80 பேரை காணவில்லை.இந்த நிலையில் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 5 பேர் காயமடைந்தனர். கதுவா மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கிஷ்த்துவாரில் மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணி 4வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
*இமாச்சலிலும் நிலச்சரிவு
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகளுக்குள் இடிபாடுகள் விழுந்துள்ளன. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.