175 மில்லியன் டாலருக்கு வங்கியை ஏமாற்றிய பெண் தொழிலதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
நியூயார்க்: பிரபல ஜேபி மார்கன் சேஸ் வங்கியை ஏமாற்றி தனது புத்தொழில் நிறுவனத்தை விற்பனை செய்த பெண் தொழில்முனைவோருக்கு 7 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சார்லி ஜவிஸ் (33) என்ற பெண், ‘ஃபிராங்க்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் புத்தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு, தனது நிறுவனத்தை 175 மில்லியன் டாலருக்கு ஜேபி மார்கன் சேஸ் வங்கிக்கு விற்பனை செய்தார். அப்போது, தனது நிறுவனத்திற்கு 40 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பதாக அவர் போலியான தரவுகளைச் சமர்ப்பித்திருந்தார். ஆனால், உண்மையில் அந்த நிறுவனத்திற்கு 3 லட்சத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களே இருந்தனர். இந்த மோசடியை அரங்கேற்றுவதற்காக, 18,000 டாலர் கொடுத்து தரவு விஞ்ஞானி ஒருவரின் உதவியுடன் போலி வாடிக்கையாளர் பட்டியலை அவர் உருவாக்கியது பின்னர் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் மாதம் சார்லி ஜவிஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில், மன்ஹாட்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது, சார்லி ஜவிஸுக்கு 85 மாதங்கள் (சுமார் 7 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 22.4 மில்லியன் டாலரை அரசிடம் ஒப்படைக்கவும், ஜேபி மார்கன் வங்கிக்கு 287.5 மில்லியன் டாலரை இழப்பீடாக வழங்கவும் ஆணையிடப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு அதிகாரியான ஆலிவர் அமருக்கு அக்டோபர் மாதம் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. தெரானோஸ், எஃப்.டி.எக்ஸ் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவன மோசடி வழக்குகளின் வரிசையில் இந்த வழக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.