ரூ.5 கோடிக்கு 7 சொகுசு கார்கள் வாங்க முடிவு; ‘லோக்பால்’ அமைப்பில் தலைவிரித்தாடும் ஆடம்பர மோகம்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
புதுடெல்லி: ஊழலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட லோக்பால் அமைப்பு, உறுப்பினர்களுக்கு பல கோடி ரூபாயில் சொகுசு கார்களை வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது நாடு தழுவிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஊழல் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் உயரிய அமைப்பாக ‘லோக்பால்’ செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக சுமார் 5 கோடி ரூபாய் செலவில் 7 சொகுசு பிஎம்டபிள்யூ கார்களை வாங்குவதற்கு லோக்பால் நிர்வாகம் கடந்த 16ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. தலா ரூ.70 லட்சம் மதிப்புள்ள ‘பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 எல்ஐ’ வகை கார்கள், தலைவர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் மற்ற 6 உறுப்பினர்களுக்காக வாங்கப்பட உள்ளன.
மேலும், கார்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு, ஒப்பந்தம் பெறும் நிறுவனமே ஒரு வார காலத்திற்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டிய அமைப்பே, மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பர கார்களை வாங்குவது ‘ஆடம்பர அமைப்பாக’ மாறுவதைக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. லோக்பாலின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட சாதாரண ரக கார்களே வழங்கப்படும் நிலையில், லோக்பால் உறுப்பினர்களுக்கு இத்தகைய சொகுசு கார்கள் எதற்கு? பொதுப் பணத்தை ஏன் இவ்வாறு செலவிட வேண்டும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, ‘ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவான அமைப்பு, இன்று சொகுசு கார்களில் மிதக்கிறது’ என விமர்சித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு ஆர்வலரான பிரசாந்த் பூஷன், ‘லோக்பால் உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் அடிமைகளாக மாறிவிட்டனர். ஊழலை ஒழிப்பதை விட ஆடம்பர வாழ்க்கையையே விரும்புகிறார்கள்’ என்று கூறியுள்ளார். இதேபோல், நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், ‘இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, டாடா அல்லது மஹிந்திரா போன்ற இந்திய தயாரிப்பு மின்சார வாகனங்களை வாங்க வேண்டும்’ என யோசனை தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஸ், ‘இது மிகவும் மோசமான முன்னுதாரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களிலும் இந்த முடிவுக்கு எதிராகப் பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன.