37 பந்தில் 75 ரன் குவிப்பு; என் பணியை செய்தேன்: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி
துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா முக்கிய துருப்பு சீட்டாக திகழ்ந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக 74 ரன்கள் விளாசிய அபிஷேக், வங்கதேசத்துக்கு எதிராகவும் 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மீண்டும் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் கூறியதாவது: நான் என் பணி எதுவோ அதைதான் செய்கிறேன். நான் முன்பே சொன்னது போல் பேட்டிங் செய்யும்போது பெரிதாக எதையும் யோசிக்கமாட்டேன். நான் அடிக்கும் ரேஞ்சில் பந்து இருந்தால் அது முதல் பந்தாக இருந்தாலும் அடித்து விடுவேன். பவர் பிளேயில் அதிக ரன்களை சேர்க்க வேண்டும். அதுதான் என் ஒரே குறிக்கோள். சில பவுலர்கள் எப்படி முதல் பந்திலேயே விக்கெட் எடுக்கவேண்டும் என்று நினைப்பார்களோ அது போல்தான் முதல் பந்திலே யே அடித்து ஆட வேண்டும் என்று நினைப்பேன்.
நேற்றைய போட்டியில் பந்து தொடக்கத்தில் கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதனால் நானும், கில்லும் முதல் சில பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு அதன் பிறகு அடித்து ஆடலாம் என பேசி வைத்துக் கொண்டோம். பீல்டிங்கில் எதிரணி வீரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்து தான் என் ஷார்ட் களை நான் தேர்வு செய்வேன். நான் எப்போதும் கண்மூடித்தனமாக பேட்டை சுற்றுவது கிடையாது. இதற்காக நான் வலை பயிற்சியில் அதிக நேரம் பேட்டிங் செய்வேன். வலைப்பயிற்சியில்தான் ஒரு பேட்ஸ்மேனால் முன்னேற முடியும். தேவையில்லாத ஷாட்கள் ஆடி விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்ற எண்ணம் எப்போதுமே என் மனதில் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.