குஜராத் மலைக்கோயிலில் கேபிள் அறுந்து 6 பேர் பலி
ஹாலால்: குஜராத்தில் மகாகாளிகா கோயிலுக்கு சென்ற சரக்கு ரோப்வே கேபிள் அறுந்து விழுந்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பாவகத் மலை மீது மகாகாளிகா கோயில் அமைந்துள்ளது. சுமார் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு பக்தர்கள் சுமார் 2000 படிக்கட்டுகளை ஏறிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் ரோப்வே மூலமாக செல்லலாம். இந்நிலையில் நேற்று காலை மோசமான வானிலை நிலவியதால் பிரதான ரோப்வே இரண்டு நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே கோயிலுக்கு சரக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு ரோப்வே டிராலி சென்றது. இதில் இரண்டு லிப்ட் ஆப்ரேட்டர்கள், இரண்டு தொழிலாளர்கள் உட்பட 6 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திடீரென ரோப்வேயின் கேபிள் வயர் அறுந்ததால் டிராலி கீழே விழுந்துள்ளது. இதில் டிராலியில் இருந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனினும் கேபிள் வயர் எந்த உயரத்தில் இருந்து அறுந்து விழுந்தது என்பது குறித்த விவரங்கள் உறுதியாக தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
மலையின் மேல் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரோப்வே டிராலி கேபிள்கள் பிற்பகல் 3:30 மணியளவில் நான்காவது கோபுரத்திலிருந்து அறுந்து விழுந்தது விசாரணையில் தெரிய வந்தது. பஞ்ச்மஹால் மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.