தமிழகத்தில் 6 கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்; பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரப்பட்டினம், கீழ்புதுப்பட்டு மற்றும் சாமியார் பேட்டை ஆகிய 6 கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின் போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையின் போது திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம், விழுப்புரம் மாவட்டம் கீழ்புதுப்பட்டு மற்றும் கடலூர மாவட்டம் சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் ஒரு கடற்கரையின் தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் இடைத்திறன்கள் போன்ற சர்வதேச நிலைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அந்த கடற்கரைகளுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடல் நீர் தரம், சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகிய 33 விதமான விதிகளை பூர்த்தி செய்து நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.