ஏமன் கடலில் படகு மூழ்கியதால் 68 அகதிகள் பலி: 74 பேர் மாயம்
ஏமன்: ஏமனுக்குள் நுழைய முயன்ற ஆப்பிரிக்க நாட்டு அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 68 பேர் உயிரிழந்ததோடு 74 பேரைக் காணவில்லை. ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருந்து ஏமன் வழியாக சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு 97,200 பேர் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இந்த கடல் வழித்தடத்தில் 2,082 பேர் காணாமல் போயுள்ளனர்; அவர்களில் 693 பேர் நீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 154 அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று, ஏமனின் தெற்குப் பகுதியில் உள்ள அபியான் மாகாணக் கடல் பகுதியில் கவிழ்ந்து மூழ்கியது. இந்த கோர விபத்தில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாகவும், 74 பேரைக் காணவில்லை எனவும் ஐ.நா.வின் புலம்பெயர்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் இருந்து 9 எத்தியோப்பியர்கள் மற்றும் ஒரு ஏமன் நாட்டவர் என மொத்தம் 10 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன பலரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.