தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் காஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்
*5 ஆயிரம் வாகனங்கள் ஓடாது என அறிவிப்பு
நாமக்கல் : தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாகனங்களுக்கும் ஆயில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டத்தால், 5 ஆயிரம் வாகனங்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான காஸ் டேங்கர் லாரிகள், சமையல் எரிவாயு ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்காக ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, டேங்கர் லாரிகளை அதன் உரிமையாளர்கள் இயக்கி வருகின்றனர். ஆயில் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் மையங்களுக்கு (பாட்டிலிங் பிளாண்டுகள்) டேங்கர் லாரிகள் சமையல் எரிவாயுவை கொண்டு செல்கின்றன.
நாமக்கல்லைச் சேர்ந்த காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த 5 ஆண்டுக்கான புதிய டெண்டரை (2025-30ம் ஆண்டு) ஆயில் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் அறிவித்தன. இந்த டெண்டரில் 3500 வாகனங்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என ஆயில் நிறுவனங்கள் அறிவித்து டெண்டரை நடத்தின.
டெண்டர் நடைமுறைகள் வரும் இரண்டு வாரங்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், டெண்டரில் பங்கேற்ற 3500 வாகனங்களுக்கும் ஆயில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. இதனால், பலர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த பிரச்னை குறித்து முடிவு எடுக்க நேற்று நாமக்கல்லில் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) சேர்மன் சண்முகப்பா கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் டெண்டரில் பங்கேற்ற அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத்தர சங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க சங்க நிர்வாகிகளுக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, ஏஐஎம்டிசி சேர்மன் சண்முகப்பா, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களும் 2025-30ம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் டேங்கர் லாரி உரிமையாளர்களை பாதிக்கும் பல விதிமுறைகளை கொண்டு வந்தன. இதனால், தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 5 ஆயிரம் வாகனங்களும் டெண்டரில் பங்கேற்க முடியவில்லை.
அவர்கள் கேட்டபடி 3500 வாகனங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கேட்டு, ஆன்லைன் டெண்டரில் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். தற்போது, சுமார் 2700 வாகனங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்து அதற்கான எல்ஓஏ (அனுமதி கடிதம்) கிடைத்துள்ளது.
800 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயில் நிறுவனங்கள் காலாவதியான சட்டங்களை மீண்டும் கொண்டு வந்துள்ளன. இதனால், ஒரு லாரி வைத்து தொழில் செய்யும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெண்டரில் பங்கேற்ற அனைத்து வாகனங்களுக்கும் ஆயில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம். உடனடியாக வேலைநிறுத்தம் துவங்குகிறது. இன்று (நேற்று) முதல் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் காஸ் லோடு ஏற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலம் முழுவதும், சுமார் 5 ஆயிரம் எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாது.
ஆயில் நிறுவனங்கள் அனைத்து காஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு அளித்தால் தான் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும். அதுவரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் சங்க செயலாளர் செந்தில்குமர், பொருளாளர் அம்மையப்பன், துணைத்தலைவர்கள் பன்னீர்செல்வம், பிரபாகரன், இணை செயலாளர்கள் கோபி, கவுசிகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.