கோயில் காவலாளி மரண வழக்கில் 5 போலீஸ்காரர்களுக்கு காவல் நீட்டிப்பு
திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கில் கைதான 5 போலீஸ்காரர்களின் காவலை வரும் 29ம் தேதி வரை நீட்டித்து திருப்புவனம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (28). கோயிலுக்கு வந்த நிகிதா என்பவர் தனது காரில் இருந்த நகைகள் மாயமானதாக போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அஜித்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் கடந்த மாதம் 29ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தனிப்படை போலீகாரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதையடுத்து டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணையை தொடங்கினர். இதனிடையே, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணன் உள்ளிட்ட 5 போலீஸ்காரர்களின் காவல் முடிவடைந்த நிலையில், இன்று காலை காணொலி மூலம் திருப்புவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் 5 பேரின் காவலையும் வரும் 29ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.