50% அமெரிக்காவின் வரிவிதிப்பால் கடும் பாதிப்பு: வங்கி கடனை திருப்பி செலுத்த ஒரு வருடம் கால அவகாசம்; ஜவுளித்துறையினர் வலியுறுத்தல்
கோவை: அமெரிக்க அரசு விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரியால் பாதிக்கப்படுபவர்களுக்கு வங்கிக் கடனை திருப்பி செலுத்த ஒரு வருடம் கால அவகாசம் தர வேண்டும் என ஜவுளித்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப்பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.இந்த 25 சதவீத இறக்குமதி வரி கடந்த 7ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் அபராத வரியும் விதிக்கப்படும் என அறிவித்து இருந்தார்.இந்த 25 சதவீத கூடுதல் வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்தது. இந்த 50 சதவீத வரி விதிப்பினால் ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அரசு விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரியால் பாதிக்கப்படுபவர்களுக்கு வங்கிக் கடனை திருப்பி செலுத்த ஒரு வருடம் கால அவகாசம் தர வேண்டும் என ஜவுளித்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து ஜவுளித்துறையினர் கூறியதாவது, ‘‘இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகள் உட்பட ஜவுளி பொருட்கள் ஆண்டிற்கு ரூ.73 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். ஜவுளி ஏற்றுமதியில் வீட்டு பொருட்களில் மட்டும் 50 சதவீதம், அப்பரல்ஸ் 33 சதவீதம் இந்தியாவில் இருந்து அனுப்புகிறோம். இந்திய டெக்ஸ்டைல் துறையை பொறுத்தவரை அமெரிக்கா ஒரு முக்கிய பங்குதாரராக இருந்து வருகிறது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு அனைவருக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இது ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அது நடக்கவில்லை.
ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் போது, அவர்கள் தொடர்புடைய அனைவரும் பாதிக்கப்படுவார்கள். வியட்நாம்,வங்கதேசம்,கம்போடியா போன்ற நமது போட்டி நாடுகள் நம்மை விட குறைவான வரி காட்டுகிறது. அவர்களை விட 30 சதவீதம் இந்தியாவிற்கு அதிகமாக வரி இருக்கிறது. இதனால் வியாபாரமே செய்ய முடியாது.வியாபாரம் செய்ய வேண்டாம் என சொல்வதைத்தான் இந்த வரி விதிப்பு காட்டுகிறது. ஐந்து சதவீதம் லாபம் மட்டுமே இருக்கும் ஒரு துறையில் 30 சதவீதம் வரிவிதிப்பு என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. கோவிட் சமயத்தில் ஏற்பட்ட சோதனையை எதிர்கொண்டதை போல, இதை எதிர்கொள்ள அரசு தரப்பில் இருந்து சலுகைகளை எதிர்பார்க்கிறோம். கோவிட் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை போல ஜவுளித்துறையினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்.
அமெரிக்காவிற்கு என பிரத்தியேகமாக பொருட்களை அனுப்பக்கூடிய நிறுவனங்களும் இங்கு இருக்கின்றது. இப்போது இந்த பொருட்களை வாங்கக்கூடிய அமெரிக்க நிறுவனத்தினரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.இந்த நெருக்கடியான சூழலில் ஐவுளித்துறையினர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை ஒரு வருடத்திற்கு தள்ளி போட வேண்டும். இந்த அறிவிப்பு உடனடியாக அரசின் சார்பில் அறவிக்கப்பட வேண்டும். நம்மிடம் கட்டமைப்பு இருந்தாலும் வேறு சந்தைகளை பிடிப்பதற்கான கால அவகாசம் வேண்டும்.
நம்முடைய போட்டி நாடுகள் வங்கதேசம், வியட்நாம் போன்றவைகளுக்கு சலுகைகள் இருக்கும் நிலையில், நம்மால் ஐரோப்பிய சந்தைகளை பிடிக்க முடிவதில்லை. நேரடியான சலுகைகளை கொடுத்தால் உடனடி தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கோவிட் சமயத்தில் பல்வேறு சவால்கள் இருந்தன, ஆனால் இப்போது ஜவுளித்துறை உட்பட ஒரு சில துறைகள் மட்டுமே நெருக்கடியில் இருப்பதால் இதை அரசால் எளிதாக சமாளிக்க முடியும். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தக்கூடாது, தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்கா - இந்தியா இடையே நல்ல புரிதல் இருக்கும் நிலையில் 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஜிஎஸ்டி மறு சீரமைப்பு, தள்ளுபடி போன்றவற்றை கையில் எடுத்திருப்பது தொழில்துறைக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது. சலுகைகள் என்பதை அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். உற்பத்தி குறைப்பு என்பது தனித்தனியாக நிறுவனங்களைப் பொறுத்து இருக்கலாம். ஏற்கனவே போடப்பட்ட ஆர்டர்கள் அனுப்புவது தற்பொழுது சவாலாக இருக்கிறது. இனிமேல் ஆடர் வருமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த பாதிப்பு என்பது ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக இருக்கும். அதை தனித்தனியாக கையாள வேண்டும்.ஆனால் அனைவருக்கும் அரசின் சார்பில் தொழிலில் மீண்டெழுவதற்கு உதவிகள் வழங்குவதுதான் சரியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகள் உட்பட ஜவுளி பொருட்கள் ஆண்டிற்கு ரூ.73 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதியாகிறது.
* இந்திய டெக்ஸ்டைல் துறையை பொறுத்தவரை அமெரிக்கா ஒரு முக்கிய பங்குதாரராக இருந்து வருகிறது.
* அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படும் போது, அவர்கள் தொடர்புடைய அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
* ஐந்து சதவீதம் லாபம் மட்டுமே இருக்கும் ஒரு துறையில் 30 சதவீதம் அதிகம் வரிவிதிப்பு என்பது ஏற்கக் கூடியதாக இல்லை.