ஆந்திர மாநிலம், திருப்பதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்திய 2 தமிழர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை
*வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்
திருமலை : திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் கடந்த 2017ம் திருப்பதி பெருமல்லா பள்ளி மற்றும் டி.என்.பாலம் ஆகிய வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தி வந்த தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி சதீஷ்குமார், திருவண்ணாமலையை சேர்ந்த குள்ளயன் வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கு விசாரணை திருப்பதியில் உள்ள செம்மரக்கடத்தல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை விசாரித்த நீதிபதி நரசிம்ம மூர்த்தி, செம்மரக்கட்டைகளை கடத்திய சுப்பிரமணி சதீஷ்குமார், குள்ளயன் வெங்கடேஷ் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ரூ.6 லட்சம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி இருவரையும் போலீசார் நெல்லூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அமர் நாராயணா சாட்சியங்களுடன் நிரூபித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க திட்டங்களை வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆந்திராவின் சேஷாச்சலம் ரிசர்வ் வனப்பகுதியில் மிகவும் மதிப்புமிக்க இயற்கை வளங்களான செம்மரங்களை வெட்டி கடத்துவது மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக காட்டுக்குள் நுழையும் குற்றவாளிகளுக்கு இந்த தீர்ப்பு எச்சரிக்கை என அதிரடிப்படை எஸ்பி ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.