உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு பதிவு அதிமுக, தவெக நிர்வாகிகள் 4 பேர் கைது: சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் நடவடிக்கை
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு பதிவு செய்த தவெக மற்றும் அதிமுக ஐடி விங்க் நிர்வாகி உட்பட 4 பேரை சென்னை பெருநகர தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த 27ம் ேததி கரூர் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் கரூர் நெரிசல் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், தவெக தலைவர் விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கரூரில் சம்பவம் நடந்தவுடன் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை யாரும் மருத்துவமனை பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. சென்னை வந்துவிட்டனர்.
இது குறித்தும் நீதிபதி வேதனை தெரிவித்திருந்தார். மேலும், பல வீடியோக்களில் நடிகர் விஜய் சென்ற சொகுசு பஸ் சக்கரத்தில் இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. பலர் காயம் அடைக்கின்றனர். ஆனால் அந்த பஸ் நிற்காமல் செல்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, பஸ்சை ஏன் பறிமுதல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் நடிகர் விஜயின் நடவடிக்கை குறித்தும் பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கொல்லாம் நடிகர் விஜய் தரப்பில் இருந்து அந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்றம் அரசியல் மேடை இல்லை, தற்போதுதான் போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளது. இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறி பலர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதுதொடர்பாக தவெக உறுப்பினர்கள் பலர் நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதிவு செய்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் படி சென்னை பெருநகர தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் நீதிபதிகளுக்கு எதிரான பதிவு செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை ேசர்ந்த தவெக உறுப்பினர் டேவிட்(25), புதுக்கோட்டையை ேசர்ந்த தவெக நிர்வாகி கண்ணன்(25), சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்த சசிகுமார்(48) மற்றும் அந்தோணி சகாய மைக்கேல் ராஜ்(37) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் சசிகுமார் என்பவர் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட ஐடி விரிவில் பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து தவறாக பதிவு செய்த நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.