சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி: திருப்பத்தூரை சேர்ந்தவர்கள்
திருப்பத்தூர்: சத்தீஸ்கரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவரது 2 மகள்கள் பரிதாபமாக பலியானார். தம்பியின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தபோது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச்சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(45), இவர் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இதனால் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகதல்பூரில் மனைவி பவித்ரா(38), மகள்கள் சவுத்தியா(8), சவுமிகா(6) ஆகியோருடன் தங்கியிருந்தார். இந்நிலையில் ராஜேஷ்குமாரின் தம்பிக்கு ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ராஜேஷ்குமார் தனது மனைவி பவித்ரா, மகள்கள் சவுத்தியா, சவுமிகா ஆகியோருடன் நேற்று காரில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சொந்த ஊரான திருப்பத்தூருக்கு புறப்பட்டார்.
அப்போது சத்தீஸ்கரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தது. நேற்றிரவு டர்பந்தனா என்ற இடத்தில் வந்தபோது மழைநீர் மற்றம் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் இருந்து வெளியே வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ராஜேஷ்குமாரின் கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்த தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலமணிநேரம் போராடி காரை மீட்டனர். ஆனால் காரில் இருந்த ராஜேஷ்குமார், பவித்ரா, சவுத்தியா, சவுமிகா ஆகிய 4 பேரும் சடலமாக கிடந்தனர். இயைதடுத்து போலீசார் 4பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக திருப்பதியில் இன்று நடக்க இருந்த ராஜேஷ்குமாரின் தம்பி திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ராஜேஷ்குமார் உள்பட 4 பேரின் சடலங்களை பிரேத பரிசோதனை முடிந்து 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டபள்ளி கிராமத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தம்பியின் திருமணத்தை காண புறப்பட்ட ராஜேஷ்குமார், மனைவி, மகள்களுடன் வெள்ளத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.