கடற்படை தின கொண்டாட்டம்: சென்னை துறைமுகத்தில் 4 ஐ.என்.எஸ் கப்பல் அணிவகுப்பு; ஆயிரக்கணக்கான மாணவர்கள் - பொதுமக்கள் பார்வை
சென்னை: கடற்படை தினத்தை கொண்டாடும் விதமாக சென்னை துறைமுகத்தில் நான்கு ஐ.என்.எஸ் கப்பல்கள் அணிவகுத்திருந்ததை ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். கடந்த 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்ததின் நினைவாக இந்திய கடற்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், கடற்படையின் பங்களிப்புகளையும் சாதனைகளையும் கவுரவிக்கும் வகையில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக கிழக்கு படை தளத்தை சேர்ந்த நான்கு போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் ஹிம்கிரி, ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ரணவீர் மற்றும் ஐஎன்எஸ் சத்புரா சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அணிவகுத்திருந்தது.
இந்த கப்பல்களை பார்வையிட 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், என்சிசி மாணவர்கள், மூத்த கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை குடும்பத்தினர் உள்ளிட்டோர் கப்பல்களில் ஏறி பார்வையிட்டனர். அப்போது, கப்பல்களில் இருந்த ஆயுதங்கள் மற்றும் அதனை கையாளுதல் முறை, சிபிஆர் (உயிர் காக்கும் முதலுதவி) பயிற்சி, தீ அணைப்பு நுட்பங்கள் ஆகியவற்றின் நேரடி காட்சிகள் நடத்திக் காண்பிக்கப்பட்டன. இது மாணவர்களுக்கு இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறனையும், போர்க்கப்பலில் வாழும் வாழ்க்கையையும் நேரடியாக உணர ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் இந்தியாவின் கடல்சார் பலத்தை வெளிப்படுத்துவதோடு, இளம் தலைமுறையினரை தேச சேவைக்காக இந்திய கடற்படையில் சேர தூண்டி, நாட்டின் கட்டமைப்பில் பங்கேற்க ஊக்குவிப்பதாகும்.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 930 மாணவர்கள், 375 என்சிசி மாணவர்கள், சென்னை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த 364 அதிகாரி மாணவர்கள் உட்பட மூத்த வீரர்கள், கடற்படை குடும்பத்தினர் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.