4 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணம்: அமைச்சர் சேகர்பாபு நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரர் கோயில் மண்டபத்தில் 4 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அத்திருக்கோயிலில் ரூ.93 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் மற்றும் செயல் அலுவலர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை தொன்மையான திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளோடு அறம் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கோயில்கள் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கும், மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் கட்டணமில்லாமல் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கரை ஆண்டுகளில் 2,800 இணைகளுக்கும், 161 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரர் கோயில் மண்டபத்தில் 4 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அத்திருக்கோயிலில் உபயதாரர் நிதி ரூ.93 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் மற்றும் செயல் அலுவலர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, உதவி ஆணையர் கி.பாரதிராஜா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளையின் தலைவர் பி.சிம்மசந்திரன், உபயதாரர் டில்லிபாபு, மாநகராட்சி உறுப்பினர் பெ.மணிமாறன், கோயில் செயல் அலுவலர் எம். கிருஷ்ணவேணி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.