டீசல் டேங்கர் மீது பஸ் மோதி கோர விபத்து 45 இந்திய யாத்ரீகர்கள் பலி: மெக்காவில் இருந்து மதீனா சென்ற போது சோகம்
ஜெட்டா: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் 45 இந்திய யாத்ரீகர்கள் பலியானார்கள். மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மெதினா நகரங்களுக்கு இஸ்லாமியர்கள் ‘உம்ரா’ எனப்படும் புனிதப் பயணத்தை மேற்கொள்வது வழக்கம். இந்தியாவிலிருந்து, குறிப்பாக தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ஏராளமானோர் உம்ரா பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் மெக்காவில் தங்கள் புனிதப் பயணத்தை முடித்துவிட்டு, மதினா நகரை நோக்கிப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் (இந்திய நேரம் அதிகாலை 1.30 மணி), மெக்காவையும் மதினாவையும் இணைக்கும் நெடுஞ்சாலையில், முப்ரிஹாத் என்ற இடத்திற்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே சென்ற டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் டேங்கர் லாரியிலிருந்து டீசல் கசிந்து, பேருந்து முழுவதும் மளமளவெனத் தீப்பிடித்து எரிந்தது.
அதிகாலை நேரம் என்பதால், பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீ பரவியதால், அவர்களால் வெளியேற முடியவில்லை.
இந்தக் கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 45 இந்தியர்களும் உடல் கருகிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சுமார் 20 பெண்களும் 11 குழந்தைகளும் இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சவுதி சிவில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது. இந்த விபத்து குறித்து ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சவுதி அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மல்லேபள்ளி, பஜார்காட் பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் இருக்கலாம் என்றும் ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்த 18 பேர் பலியாகி இருக்கலாம் என்றும் தெலங்கானா அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள வித்யா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ஷேக் நசீருதீன், தனது மனைவி, மகன், மூன்று மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மதீனாவுக்குச் செல்லும் வழியில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக அவரது மருமகன் முகமது அஸ்லம் தெரிவித்தார். இறந்தவர்களில் 10 குழந்தைகள் இருப்பதாக தெலங்கானா ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஐதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் கூறுகையில்,’ நவம்பர் 9 ஆம் தேதி ஐதராபாத்தில் இருந்து ஜெட்டாவுக்கு 54 பேர் புனித பயணம் செய்தனர். அவர்கள் நவம்பர் 23 ஆம் தேதி திரும்ப திட்டமிடப்பட்டிருந்தனர். 54 பேரில், நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை மதீனாவுக்கு தனித்தனியாக காரில் பயணம் செய்தனர். மேலும் நான்கு பேர் மெக்காவில் தங்கினர். மதீனாவுக்கு பஸ்சில் 46 பேர் பயணம் செய்தனர். மதீனாவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் விபத்து நடந்தது. இந்த கோர விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்றார்.
இதற்கிடையே விபத்தில் இந்தியர்கள் பலியானதை தொடர்ந்து அங்குள்ள சூழலை ஆய்வு செய்ய ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் விபத்து நடந்த இடத்திற்கு அதிகாரிகளை சென்று ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் இறந்தவர்களை அடையாளம் காணும் செயல்முறை நடந்து வருவதால், பலி எண்ணிக்கை குறித்த எந்த விவரங்களையும் தெரிவிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்தனர்.
பலியானது யார், யார்?
மதீனாவுக்கு சென்ற பஸ்சில் பயணம் செய்தவர்கள் குறித்த தகவல் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
* ஐதராபாத்தில் உள்ள வித்யா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ஷேக் நசீருதீன், தனது மனைவி, மகன், மூன்று மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மதீனாவுக்குச் செல்லும் வழியில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக அவரது மருமகன் முகமது அஸ்லம் தெரிவித்தார்.
* ஐதராபாத்தை சேர்ந்த முப்தி ஆசிப், தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உம்ரா செய்ய சவுதி அரேபியாவுக்குச் சென்றதாகக் கூறினார்.
* ஐதராபாத்தை சேர்ந்த முகமது சல்மான் குடும்பத்திலும் 6 பேர் பஸ்சில் பயணம் செய்துள்ளனர்.
* தீயில் கருகிய பஸ்சில் இருந்த 46 பேரில் 43 பேர் ஐதராபாத் எல்லையைச் சேர்ந்தவர்கள், 2 பேர் சைபராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கர்நாடகாவின் ஹூப்பலி முகவரியைக் கொண்டவர்.
* பஸ்சில் எரிந்து பலியானது 17 ஆண்கள், 18 பெண்கள், 10 குழந்தைகள்.
* சவுதி அரேபியாவில் புனிதப் பயணிகள் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல.
* 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மெதினா அருகே இதேபோன்று நடந்த விபத்தில் 35 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.
* 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அசிர் மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 20 உம்ரா யாத்ரீகர்கள் பலியாகினர்.
* தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மதினாவில் நிகழ்ந்த துயரமான பேருந்து விபத்தில் இந்தியாவில் இருந்து உம்ரா புனிதப்பயணம் சென்றிருந்த பலர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: மதினாவில் நிகழ்ந்த துயரமான பேருந்து விபத்தில் சிக்கி, இந்தியாவில் இருந்து உம்ரா புனிதப்பயணம் சென்றிருந்த பலர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். உற்றாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு இத்துயர்மிகு வேளையில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த நபர் முழுமையான மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் நலமடைய விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* ஐன்னலை உடைத்து தப்பிய ஒரே நபர்
பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த 24 வயதான முகமது அப்துல் ஷோயப் என்பவர் மட்டுமே உயிர் தப்பினார். பஸ் டிரைவர் அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார். டீசல் டேங்கர் மீது மோதி பஸ் தீப்பிடித்ததும் அவர் ஐன்னலை உடைத்து வெளியே குதித்து உயிர்தப்பி உள்ளார். இருப்பினும் அவரது கைகள் தீயில் எரிந்து விட்டன. அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
* அசாருதீன் தலைமையில் சவுதி செல்லும் குழு
சவுதியில் நடந்த பேருந்து விபத்தைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க தெலங்கானா அரசு சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் தலைமையில் ஒரு குழு சவுதி செல்ல உள்ளது. சவுதி அரேபியாவில் மத மரபுகளின்படி இறந்தவர்களின் இறுதிச் சடங்கை நடத்தவும், தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தலா 2 பேர் அரசு சார்பில் சவுதி அரேபியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்தக் குழுவில் ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஒரு எம்எல்ஏ மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி ஒருவர் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.