கரூரில் 41 பேர் பலிக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை பாதுகாப்பான இடங்களையே இனி பிரசாரத்துக்கு கேட்பேன்: 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்டு சொல்கிறார் விஜய்
சென்னை: பிரசாரத்துக்கு இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம் என கரூர் கொடூர சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்டு நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு (செப். 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி.. கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை. தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும். என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி. விரைவில் அனைத்து உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன். இவ்வாறு கூறியுள்ளார். கரூரில் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியானதற்கு தவெக எந்த தவறும் செய்யவில்லை என விஜய் சொன்னாரே தவிர, அந்த சம்பவத்துக்கு அவர் வருத்தம் கூட தெரிவிக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.