40% பச்சிளம் குழந்தைகளுக்கு 6 மாதம் கூட தாய்ப்பால் கிடைப்பதில்லை: 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; ஒருநாளைக்கு 10 முறை கொடுப்பது அவசியம்; மருத்துவர்கள் அறிவுறுத்தல்
* சிறப்பு செய்தி
தா ய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இயற்கையின் வரமாக கருதப்படுகிறது. இது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குவதோடு, தாய்மார்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் போன்ற அமைப்புகள் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் (பிரத்தியேக தாய்ப்பால் ஊட்டுதல்).
இதைத் தொடர்ந்து, 2 வயது வரை அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் உடன் இணை உணவுகளுடன் வழங்கப்பட வேண்டும். ஆனால், உலகளவில் இந்த பரிந்துரையை பின்பற்றுவோர் தாய்மார்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 2015 முதல் 2020 வரையிலான புள்ளி விவரங்களின்படி, உலகளவில் 44 சதவீதம் குழந்தைகள் மட்டுமே 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கிடைகிறது. தெற்காசிய நாடுகளில் சுமார் 60 முதல் 65 சதவீத குழந்தைகள் 6 மாதங்களுக்கு பிரத்தியேக தாய்ப்பால் பெறுகின்றனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 58.82 தாய்மார்கள் பால் சுரப்பு குறைவு என்ற காரணத்தால் 6 மாதங்களுக்கு முன்பே பிரத்தியேக தாய்ப்பால் ஊட்டுதலை நிறுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இந்த விகிதத்தை உயர்த்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு, யுனிசெப், அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், தாய்மார்களுக்கு ஆதரவு அளிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, 2025ம் ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்திற்கான கருப்பொருள் ‘தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்: நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள்’ என்பதாகும். இந்த கருப்பொருளை முன்னிறுத்தி பொது இடங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு எற்படுத்தி வருகின்றனர். 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் ரெமா சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த காலங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்ப்பால் விகிதம் தற்போது இல்லை. அது குறைந்துவிட்டது. 50 சதவீத தாய்மார்கள் தான் பிறந்த உடன் தாய்ப்பால் கொடுக்கிறார்கள். அதேபோல், 60 முதல் 65 சதவீத தாய்மார்கள் தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கிறார்கள். இந்த சதவீதம் குறைய கூடாது என்ற நோக்கத்துடன் இந்த தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. கடந்த காலத்தில் தாய்மார்களிடம் பால் இருந்தால் போதும், குழந்தை பால் குடித்தால் போதும் என இருந்தோம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பதில் பல தடங்கல் உள்ளது.
பிரசவம் முடிந்து வார்டுக்கு சென்ற பிறகு கிட்டத்தட்ட 6 மணி நேரம் குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும். அப்போது அந்த குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுப்பதால் குழந்தைக்கும் தாய்க்கும் ஒரு பந்தம் ஏற்படும். அத்துடன் தாய்க்கு ஆக்ஸிடாஸின் ஹார்மோன் சுரக்கும். அது கர்ப்பப்பை சுருங்குவதற்கு உதவியாக இருக்கும். மேலும் தாய்மார்களுக்கு சீம்பால் 3 நாட்கள் சுரக்கும். அது குழந்தைக்குத் முறையாக முழுமையாக கொடுத்தால் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை அது வழங்கும். பசி, தண்ணீர் எதுவும் தேவை இருக்காது. முறையாக தாய்ப்பால் கொடுத்தால் போதும்.
தாய்ப்பால் தொடர்ந்து வழங்குவதால் நிமோனியா உள்ளிட்ட எந்த நோய் பாதிப்பும் ஏற்படாது. மேலும் குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்பதால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். கிட்டத்தட்ட 80 சதவீத மூளை வளர்ச்சி 2 வயதுக்குள் முடிகிறது. எனவே மூளைக்கு தேவையான அமீனோ அமிலம் அனைத்தும் தாய்ப்பாலில் உள்ளது. புதிய தாய்மார்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என 10 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக 2 மார்பகத்தில் உள்ள பால் முழுமையாக காலியாகும் வரை தாய் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 3 முதல் 4 மாதம் வரை தாய்ப்பால் மிகவும் முக்கியம்.
வேலைக்கும் செல்லும் பெண்கள் விடுமுறை எடுத்து குழந்தையை பராமரிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தாய்ப்பாலை பால் டப்பாவில் எடுத்து குழந்தைக்கு கொடுக்க தனியாக வைக்கலாம். சரியான நேரத்தில் அந்த குழந்தைக்கு யாரவது பால் கொடுத்தால் போதும். பவுடர் பால் ஒரு மாற்றாகக் கருதப்படுகிறது. ஆனால் அது தேவை இல்லை தாய்ப்பால் தான் சிறந்தது. 1 வயது வரை பசும்பால் கொடுக்க கூடாது. வட கிழக்கு மாநிலத்தில் தாய்ப்பால் கொடுக்கும் சதவீதம் இங்கு விட அதிகமாக உள்ளது. எனவே அதனை அதிகரிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் போது நல்ல வசதியான அமர்ந்து பொறுமையாக மகிழ்ச்சியாக கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* தாய்ப்பால் கொடுக்கும் முறை
நீண்ட இடைவெளி விட்டு குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது. அடிக்கடி பால் கொடுத்தால்தான் பால் நன்றாக சுரந்து குழந்தை நன்றாக ஆரோக்கியமாக வளரும். குழந்தைக்கு பால் ஊட்டும்போது தாய்மார்கள் மகிழ்ச்சியாக பால் ஊட்ட வேண்டும். குடும்ப பிரச்னைகள் பற்றி கவலையோ, பயத்துடனோ கொடுத்தால் அது குழந்தையின் மன நிலையை பாதிக்க வாய்புள்ளது. தாய்ப்பால் கொடுக்கும்போது வசதியாக சம்மணம் போட்டு உட்கார வேண்டும். குழந்தையை தாய் தன் உடலோடு அரவணைத்து பாலூட்ட வேண்டும். அப்போதுதான் தாய்க்கும், குழந்தைக்குமான பாச பிணைப்பு அதிகமாகும்.
* எப்படி அறிவது?
குழந்தை பால் குடித்து முடித்ததும் மார்பில் இருந்து தனது வாயை வெளியே எடுத்துவிட்டு விளையாட ஆரம்பித்து விடும். பக்கத்தில் இருப்பவைகளைப் பார்க்க ஆரம்பித்து விடும். நன்றாக பால் குடித்துக் கொண்டிருந்த தனது வேகத்தைக் குறைத்துக் கொள்வதுடன், தீவிரமாக இல்லாமல் மிகவும் மெதுவாக குடிக்க ஆரம்பிக்கும். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தை 24 மணி நேரத்தில் 6 தடவை சிறுநீர் கழித்தால் குழந்தை தனக்கு தேவையான அளவு தாய்ப்பால் குடித்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு 500 கிராமிலிருந்து குழந்தையின் உடல் நிலைக்குத் தகுந்தபடி குழந்தையின் எடை அதிகரிக்கும்.
* தவிர்த்தால் ஆபத்து
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காததன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு அவர்களின் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும். காது நோய் தொற்றுகள், மார்பு அல்லது சுவாச நோய்த்தொற்றுகள், பல் சிதைவு, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி மற்றும் நிமோனியா உள்ளிட்ட இரைப்பை குடல் அழற்சி, குழந்தை பருவ உடல் பருமன் பிரச்னைகளை தவிர, டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோய், லுகேமியா, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படலாம்.
* பராமரிக்கும் முறைகள்
சென்ட் போன்ற வாசனை திரவியங்களை தாய்மார்கள் பயன்படுத்த கூடாது. மார்பகங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. தளர்வான உடைகள் மட்டுமே அணிய வேண்டும். குளிக்கும் போது மார்பகத்தை தண்ணீரால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். சோப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 1 வயது வரை பசும்பால் கொடுக்க கூடாது.
* சாப்பிட வேண்டிய உணவுகள்
தாய்ப்பால் சுரக்க தாய்மார்கள் கீரைகள், பூண்டு அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், ஓட்ஸ் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி, ஆப்பிள், போன்ற பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நட்ஸ் மற்றும் விதைகள் சாப்பிட வேண்டும் மற்றும் வெந்தயம் சேர்த்துக் கொள்வது நல்லது.
* தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதிக அளவு காபின் குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே அதனை தவிர்க்க வேண்டும். புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் தாய்ப்பாலின் தரத்தை பாதித்து, குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். காரமான உணவுகள் குழந்தைகளுக்கு வாயு பிரச்னைகளை உருவாக்கலாம். எனவே அதனை தவிர்க்க வேண்டும்.