4 மாநில தேர்தலுக்காக ஜிஎஸ்டி வரி குறைப்பு
*தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு
தூத்துக்குடி : 4மாநில தேர்தலுக்காக ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது என தூத்துக்குடியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மான விளக்க கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்ட மன்ற தொகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை சிறப்பாக செய்த தொகுதிக்கு 15 பேர் வீதம் மொத்தம் 45 பேருக்கு சேலை, வேஷ்டி, ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக. ஓன்றிய அரசு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறேன் என்று திமுக தலைவர் தமிழ்நாட்டை வழிநடத்துகிறார். ஜிஎஸ்டியை குறைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தினோம். அப்போது ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது என்று கூறிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் தற்போது ஜிஎஸ்டி வரியை நாங்கள் குறைத்து விட்டோம் என்று மார்தட்டி கொள்கின்றனர்.
மக்களுக்கு நல்லது தான் என்றாலும் கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி மூலமாக மக்களை சுரண்டி விட்டு தற்போது நான்கு மாநிலங்களில் தேர்தல் வருகிறது என்பதால் மோடி அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது. மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தி உள்ளது. சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதால் லாரி வாடகை உயரும், அதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும்.
பெரிய தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்த ஒன்றிய அரசு தமிழக மாணவர்களின் நலனுக்காக கல்வி கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன்? எடப்பாடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்க்க போவதை வெளிப்படையாக சொல்லாமல் முகத்தை மூடிக்கொண்டு சென்று வருகிறார். அதிமுகவை பாஜவிடம் அடகு வைத்து விட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ் இனத்திற்கு எதிரானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாட்டை காப்பாற்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை ஆட்சி கட்டில் அமர வைக்க அனைவரும் சபதம் ஏற்று இந்த மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காலடியில் சமார்ப்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், சிறுபான்மை அணி மாநில துணை செயலாளர் எஸ்டிஆர். பொன்சீலன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், நகர செயலாளர் சுரேஷ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மண்டலத்தலைவர்கள் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணிஸ்டாலின், அபிராமிநாதன், மதியழகன், குபேர் இளம்பரிதி, ஜெயசிங், அருண்குமார், மாநகர அணி நிர்வாகிகள் அருண்சுந்தர், முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், பரமசிவன், செல்வின், கவுன்சிலர் இசக்கிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.