ஓமலூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறி செய்த போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது
ஓமலூர் : ஓமலூர் அருகே இளநீர் வியாபாரியை வழிமறித்து ஒரு பவுன் மோதிரத்தை வழிப்பறி செய்த போலீஸ்காரர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள இலவமரத்தூரை சேர்ந்தவர் எல்லப்பன்(54). இவர் ஓமலூரில் 2 ஆம்புலன்ஸ், ஒரு அமரர் ஊர்தி, ஒரு செப்டிக் டேங்க் கிளீனிங் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும், ஓமலூர் அரசு மருத்துவமனை முன்பு இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் செப்டிக் டேங்க் கழிவுகளை எடுத்து கொண்டு, ஓமலூர் அருகே கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தில் ஒரு விவசாய தோட்டத்தில் கொட்டச் சென்றுள்ளார். அங்கு சென்ற போது, 4 பேர் டூவீலரில் வந்து, அவரது வாகனத்தை வழிமறித்து, எதற்கு இங்கு வந்து கழிவுநீரை கொட்டுகிறாய் என மிரட்டி அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரத்தை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு சத்தியராஜ், இளங்கோவன், அஜித்குமார், சிவக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த டீ மாஸ்டர் சடையன் (எ) சத்தியராஜ் (31) மீது ஏற்கனவே ஆட்டையாம்பட்டி, மல்லூர், வெண்ணந்தூர் காவல் நிலையங்களில் 8 வழக்குகள் உள்ளன. அதே பகுதியை சேர்ந்த நெசவு கூலி தொழிலாளியான இளங்கோவன் (28) மீது மகுடஞ்சாவடி, மல்லூர், மேச்சேரி, திருச்செங்கோடு ரூரல் ஆகிய காவல் நிலையங்களில் 7 வழக்குகள் உள்ளன.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நடுப்பட்டியை சேர்ந்த காலா (எ) அஜித்குமார் (28) மீது, மகுடஞ்சாவடியில் ஒரு வழக்கு உள்ளது. ஓமலூர் கள்ளிக்காட்டை சேர்ந்த சிவக்குமார் (36), சூரமங்கலம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி, விட்டோடி (பணிக்கு செல்லாமல்) காவலராக சுற்றி திரிந்து வந்துள்ளார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து எல்லப்பனிடம் ஒரு பவுன் மோதிரத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.