மதுரையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி: 66 பேருக்கு வைரல் காய்ச்சல்!
மதுரை: மதுரையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 66 பேர் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மதுரையில் 66 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 36 குழந்தைகள், 30 பெரியோர்கள் என மொத்தம் 66 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், திண்டுக்கல் காமராஜபுரத்தை சேர்ந்த 53 வயதான பெண் ஒருவருக்கும், மதுரை அனுப்பானடியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவருக்கும் டெங்கு பாதிக்கப்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோயம்புத்தூரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.