பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நாய்கள் விற்பனை என்கிற பெயரில் லோடு வேனில் 2 டன் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலின்போது விற்பனைக்கு கொண்டு சென்ற 2 சிப்பிப்பாறை நாய்களை போலீசார் மீட்டனர். பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் லாரிகள் நிறுத்தம் பகுதிக்கு அருகே சந்தேகத்திற்கு இடமாக லோடு வேன் ஒன்று நீண்டநேரமாக நின்றிருப்பதாகவும் உள்ளே இருந்து நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்பதாக நசரத்பேட்டை போலீசாருக்கு பொதுமக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சாய் கணேஷ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று லோடு வேன் டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லோடு வேனில் சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. மேலும், சிப்பிப்பாரை வகை நாய்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, லோடு வேன் டிரைவரான ராஜலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், அதேபகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கலில் ஈடுபட்டிருந்த லிங்கதுரை, தமிழ் ஆகியோரையும் கைது செய்தனர். 50க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த 2 டன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை லோடு வேனில் கடத்தி வந்து சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்திமிடத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து டூவிலரில் கடைகளுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். மேலும், தமிழகத்தில் இருந்து சிப்பிப்பாறை நாட்டு ரக நாய்களை குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று வடமாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்த வந்துள்ளனர். மேலும், நாய்கள் விற்பனைக்கு கொண்டு செல்வதுபோல் போலீசாரை திசை திருப்பி குட்கா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 2 டன் குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட ராஜலிங்கம், லிங்கதுரை, தமிழ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், குட்கா கடத்தலின்போது மீட்கப்பட்ட 2 நாய்களை போலீசார் காவல் நிலையத்தில் கட்டி வைத்து பராமரித்து வருகின்றனர். நாய்கள் விற்பனை என்கிற பெயரில் குட்கா கடத்ததலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.