ஐஐடிகளுக்கு இடையிலான 39வது நீர் விளையாட்டு: சென்னை ஐஐடியில் தொடங்கியது
சென்னை: ஐஐடிகளுக்கு இடையிலான 39வது நீர் விளையாட்டுப் போட்டிகள்-2025ஐ ஐஐடி மெட்ராஸ் நடத்துகிறது. ஐஐடிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி 1961ல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி ஐஐடிக்களுக்கு இடையிலான 58வது விளையாட்டுப் போட்டியை ஐஐடி ஐதராபாத், ஐஐடி திருப்பதி ஆகியவற்றுடன் இணைந்து சென்னை ஐஐடி இந்த ஆண்டு நடத்துகிறது. அக்டோபர் 5ம் தேதி வரை ஐஐடி மெட்ராஸ் தனது வளாகத்தில் இதனை நடத்துகிறது. இது ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மிகப்பெரிய, பழமையான விளையாட்டு நிகழ்வாகும்.
விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக, ஐஐடிக்களுக்கு இடையேயான நீர் விளையாட்டுப் போட்டி-2025ஐ நேற்று ஒலிம்பிக் நீச்சல் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான செபாஸ்டியன் சேவியர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, டீன் சத்தியநாராயண என்.கும்மாடி, ஆசிரிய உறுப்பினர்கள், விளையாட்டுத் துறை அதிகாரிகள், போட்டிகளில் பங்கேற்கும் பல்வேறு ஐஐடிக்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.