பரேலியில் நீடிக்கும் பதற்றம்; சிறுபான்மையினரின் 38 கடைகளுக்கு சீல்: பழிவாங்கலா? ஆக்கிரமிப்பு அகற்றலா?
பரேலி: ‘ஐ லவ் முகமது’ பேரணியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, பரேய்லியில் சிறுபான்மையினருக்குச் சொந்தமான 38 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக கான்பூரில் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பரேல்வி மதகுரு மவுலானா தௌகீர் ரஸா கான் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், கடந்த 26ம் தேதி நடந்த வன்முறையால் மதகுரு தௌகீர் ரஸா கான் கைது செய்யப்பட்டார். மேலும், வதந்திகள் பரவுவதைத் தடுக்க இணைய சேவைகள் முடக்கப்பட்டு, 8,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பரேலி நகரில் சிறுபான்மையினருக்குச் சொந்தமான 38 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது காவல்துறையினரின் பழிவாங்கும் நடவடிக்கை என கடை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களுக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருந்தபோதிலும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பரேலி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் சிங் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமான ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாகும். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க முயன்ற கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. முறையான ஆவணங்களைக் கொண்ட எந்தக் கடை உரிமையாளரும் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்’ என்றார். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட சமூகத்தினரை மாநில அரசு குறிவைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் பரேலியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.