33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா திட்டம்: ரஷ்யா, சீனா நாடுகளுக்கு அச்சுறுத்தல்
பூசான்: அமெரிக்கா -ரஷ்யா இடையே கடந்த 2000ம் ஆண்டில் புளூட்டோனியம் மேலாண்மை தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 2010ம் ஆண்டு திருத்தப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி ரஷ்யா தனது கையிருப்பில் உள்ள 34 மெட்ரிக் டன் புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்த கூடாது. மாறாக இவற்றை அணு மின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஒப்பு கொண்டன. இந்த சூழலில் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் இதனை ரஷ்யா நிராகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவுடனான புளூட்டோனியம் ஒப்பந்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அண்மையில் ரத்து செய்து, அதற்கான புதிய சட்டத்திருத்தத்தில் கையெழுத்திட்டு அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும், அணு ஆயுதங்களை பயன்படுத்தி நீண்ட தூரம் செல்லும் அணு சக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் டிரோன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார். இத்தகைய பதற்றங்களுக்கு அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில், “அமெரிக்கா தற்போது உலகிலேயே மிக அதிகளவில் அணு ஆயுதங்களை கொண்ட நாடாக உள்ளது. என் முதல் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நவீன மயமாக்கல் நடவடிக்கைகளே இதற்கு காரணம். அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை தற்போது ரஷ்யா இரண்டாமிடத்திலும், சீனா மூன்றாமிடத்திலும் உள்ளது. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை நமக்கு சமமாக இருக்கும். பிற நாடுகள் அணு ஆயுதங்களை சோதித்து வருவதால் மாற்றங்கள் அவசியமாகிறது. அதனால் அணு ஆயுதங்களை சமஅளவில் பரிசோதிக்க போர்த்துறைக்கு அறிவுறுத்தி உள்ளேன். இது உடனடியாக தொடங்கும்” என தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் ரஷ்யா, சீனா நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
* 1992ல் அமெரிக்கா நடத்திய சோதனை
அமெரிக்காவில் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக இருந்தபோது கடைசியாக, கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி நெவாடா பாலைவனத்தில் அணு ஆயுத சோதனையை நடத்தியது. அதன்பிறகு 33 ஆண்டுகளாக எந்தவொரு அணு ஆயுத சோதனையையும் அமெரிக்கா நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
