கூடலூர் அரசு உண்டு உறைவிட பள்ளியில் 33 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்
*4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
கூடலூர் : கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 3 மாணவிகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து உடல்நிலை சரியில்லை என்று கூறிய மேலும் 30 மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவர்களை, மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது 3 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டிருப்பதும் 2 மாணவிகளுக்கு தொண்டையில் வலி உள்ளதும், 28 குழந்தைகளுக்கு சளி அதிகமாக உள்ளதையும் கண்டறிந்தனர். இதில், காய்ச்சல் அதிகமாக உள்ள 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீதம் உள்ள மாணவர்களை சோதனைக்கு பின் பள்ளிக்கு திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த கூடலூர் ஆர்டிஓ குணசேகரன், தாசில்தார் முத்துமாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்களுக்கு சளி தொற்று, தொண்டை வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து உடல் நலம் பாதிப்புக்குள்ளான 33 மாணவ, மாணவிகளையும் அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றனர்.
இதில், 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மற்ற அனைவரும் நலமுடன் உள்ளனர்.இருப்பினும், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
இதற்காக மருத்துவ குழுவினர் அனைத்து குழந்தைகளையும் கண்காணித்து வருகின்றனர்’ என்றனர்.மொத்தமாக 33 பழங்குடியின பள்ளி மாணவ, மாணவியர் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.