பொள்ளாச்சியில் 15 மையங்களில் நடைபெற்ற குரூப்-2 தேர்வை 3,075 பேர் எழுதினர்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 15 மையங்களில் நடைபெற்றது. இதில், 3,075 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா பகுதியில் நேற்று தனியார் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட 15 மையங்களில் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட குரூப் 2, குரூப் 2ஏ விற்கான தேர்வு நடைபெற்றது. குரூப் 2 தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர்.
முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் உரிய சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை முதல் மதியம் வரை வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்த மையங்களில் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மொத்தம் தேர்வர்களில் 4217 பேரில், 3075 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
1142 பேர் ஆப்சென்ட் ஆகினர். பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட மையங்களில் நடைபெற்ற இத்தேர்வுகளை பொள்ளாச்சி சப்-கலெக்டர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தாசில்தார் உள்பட பல அதிகாரிகள் இருந்தனர்.