30 நாள் விசா இல்லாத திட்டம் இந்தியர்களுக்கு மலேசியா எச்சரிக்கை: பணம், ஆவணம் இன்றி தரையிறங்க முடியாது
புதுடெல்லி: போதுமான பணம், உரிய ஆவணம் இன்றி 30 நாள் விசா இல்லாத திட்டத்தில் வந்தால் தரையிறங்க முடியாது என இந்தியர்களுக்கு மலேசியா எச்சரித்துள்ளது. வணிகம், சுற்றுலாவை மேம்படுத்த இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியாவில் 30 நாள் விசா இன்றி தங்கலாம். இந்த திட்டம் கடந்த 2023 டிசம்பர் முதல் 2026 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இந்நிலையில், இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மலேசிய குடியேற்ற விதிகளின்படி, பயணத்திற்கான போதுமான நிதி, தங்குமிடத்திற்கான ஆதாரம், நாடு திரும்பும் டிக்கெட் இல்லாமல், 30 நாள் விசா இல்லாத திட்டத்தை பயன்படுத்தி வேலை தேடும் நோக்கத்தோடு வருபவர்கள் குடியேற்ற விதிகளை மீறுபவர்களாக கருதப்பட்டு அவர்கள் தரையிறங்க முடியாத பிரிவில் சேர்க்கப்படுவார்கள். அப்படி வருபவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அவர்களை திரும்ப அழைத்துச் செல்லும் வரை விமானத்திலேயே தங்கியிருக்க வேண்டும். 30 நாள் விசா இல்லாத திட்டம் மலேசியாவில் வேலை தேடுவதற்கான நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதல்ல. எனவே, வேலைவாய்ப்பு உறுதி அளிக்கும் ஏஜென்ட்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.