குட்டையில் விளையாடியபோது அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
சோளிங்கர் : பாணாவரம் அருகே குட்டையில் மூழ்கி அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே மேட்டு குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன்.
இவரது மகன் புவனேஷ்(9) அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த கோபி என்பவரின் மகன்கள் மோனி பிரசாத்(10), சுஜன்(8). இவர்கள் அரசு பள்ளியில் 5ம் வகுப்பும், 3ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுவர்கள் 3 பேரும் நேற்று அருகிலுள்ள குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தனர். நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக 3 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சோளிங்கர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 சிறுவர்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.