தோட்டத்தில் பராமரித்து வந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் கைது
*மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்
திருமலை : ஆந்திராவில் தோட்டத்தில் பராமரித்து வந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் தண்ணிரு விஜய குமார். இவருக்கு ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜநகரம் மண்டலம், நந்தரடா கிராமத்தில் 12 ஏக்கரில் விவசாய பண்ணை உள்ளது.
இந்த பண்ணையில் தென்னை, மா, தேக்கு, செம்மரம் மற்றும் சந்தன மரங்கள் நட்டு வளர்த்து வருகிறார். பண்ணையில் சோமேஸ்வர ராவ் என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி மாலை வழக்கம்போல் சோமேஸ்வர ராவ், பண்ணை வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்.
இதற்கிடையில் 19ம் தேதி காலை பண்ணையில் தோட்டக்காரராக பணிப்புரியும் ராஜூ சத்தியநாராயணா என்பவர் தோட்டத்தை சுற்றிப்பார்த்த போது 2 சந்தன மரங்களை வெட்டிக் கடத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சோமேஸ்வர ராவுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சோமேஸ்வர ராவ் போலீசில் புகார் செய்தார்.
சந்தன மரங்கள் வேர்கள் வரை வெட்டப்பட்டு துண்டுகளாக வெட்டி திருடப்பட்டது குறித்து இன்ஸ்பெக்டர் பிரசன்ன வீரய்யா கவுட், எஸ்.ஐ. பிரியா குமார் மேற்பார்வையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மேலும், சந்தேகத்தின்பேரில் மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்த சிலரிடம் விசாரணை செய்தனர். அதில் கட்னி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாலிஸ் ஆதிவாசி, சிவராஜ் ஆதிவாசி மற்றும் உல்லிஷ் என்கிற டிட்டு ஆகிய 3 பேர் மரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது.
அதனடிப்படையில் போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10.25 லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.