மின்சாரம் பாய்ந்து தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 தொழிலாளர்கள் பரிதாப பலி
கோவை: கோவையில் மின்சாரம் பாய்ந்து தண்ணீர் தொட்டியில் விழுந்து கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். கோவை கணபதி, உடையாம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (27), தர்மபுரியை சேர்ந்த குமார் (32) ஆகியோரும் வேலை செய்து வந்தனர். நேற்று இருவரும் அவர்கள் வேலை செய்து வரும் கட்டிடத்தின் தரைதளத்திற்கு வந்தனர். அப்போது கட்டிடத்தின் தரையில் கிடந்த மின்சார வயரில் கால் வைத்தனர்.
இதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தனர். இவர்களின் சத்தம் கேட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். மின் இணைப்பை துண்டித்த அவர்கள் தொட்டிக்குள் விழுந்து இறந்தவர்களின் உடலை மீட்டனர். இது குறித்து கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.