வங்கக் கடலில் 2 காற்று சுழற்சிகள் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை ெகாண்டுள்ளதால் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெப்பநிலை தற்போது நடுநிலையில் இருக்கிறது. அதாவது ‘வலுவிழந்த லா-நினா’ என்ற அளவில் சூழல் நீடித்து வருகிறது. அதன் காரணமாக செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கோவில்பட்டி உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அனேக இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும் நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையும், வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. மேலும் தஞ்சாவூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், பாம்பன், ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், கடலூர், மதுரை மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை ெகாண்டுள்ளது இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. மேலும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும் பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தேனி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழையும் பெய்யும். திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை 10ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.