மாநகராட்சி பள்ளியில் திருடிய 2 பேர் கைது
சென்னை: ராயப்பேட்டை பேகம் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹ்பூர் ரஹ்மானி (57), கடந்த 6ம் தேதி ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, கடந்த 6ம் தேதி காலை பள்ளியை திறந்த போது, சமையல் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர், 3 அலுமினிய டபராக்கர், 2 தராசுகள், 5 எடைகற்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். விசாரணையில், ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த 5 குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி விக்கி (எ) விக்னேஷ் (25), ராயப்பேட்டை முத்தையா தோட்டம் பகுதியை சேர்ந்த வசந்த் (எ) வசந்தகுமார் (24) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, பள்ளியில் திருடிய பொருட்கள் பறிமுதல் செய்தனர்.