சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2 டன் வெடிபொருட்கள் பறிமுதல்: டிரைவர் கைது
மதுக்கரை: சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2 டன் வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர். கோவை மாவட்டம் மதுக்கரை வழியாக கேரளாவுக்கு ஒரு வாகனத்தில் வெடி பொருட்கள் கடத்தி வருவதாக மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், எஸ்ஐ பாண்டியராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை மதுக்கரை எல்என்டி பைபாஸ் ரோட்டில் மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசார் வேனை திறந்து பார்த்தனர். வேனில் பெட்டி பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் இருப்பது தெரியவந்தது.
வேனை முழுமையாக சோதனை செய்ததில் 75 பெட்டிகளில் தலா 200 ஜெலட்டின் குச்சிகள் வீதம் 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் 2 டன் இருப்பதும், அவற்றை சேலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் மலப்புரம் ஹரிம்பரா பகுதியை சேர்ந்த புத்துக்குட்டி என்பவரது மகன் சுபேர் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வெடி பொருட்கள் சேலத்தில் எங்கு வாங்கப்பட்டது?, எதற்காக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது? பொருட்களை கடத்தி வரச்சொன்னது யார்?, இவர்களுக்கு பின்னணியில் இருப்பது யார்?, இவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுக்கரை போலீசார், வெடி பொருட்கள் பறிமுதல் செய்துள்ள தகவலறிந்த பேரூர் சரக டிஎஸ்பி சிவக்குமார் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.