வாகனம் மோதி இறந்த முள்ளம் பன்றியை சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது
கோத்தகிரி: கோத்தகிரியில் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்த முள்ளம் பன்றியை சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ராம்சந்த் பகுதி முதல் தாந்தநாடு செல்லும் சாலையில் கடந்த 8ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி முள்ளம்பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இறந்து கிடந்த முள்ளம் பன்றியை ஹெல்மட் அணிந்த நபர் பைக்கில் எடுத்து செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
தாந்தநாடு பகுதியில் வசித்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த ராஜூ தாபா (32), ஜோசப் (33) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது இறந்து கிடந்த முள்ளம் பன்றியை வெட்டி சுத்தம் செய்து சாப்பிட்டதை ஒப்புக்கொண்டனர். இச்சம்பவத்தில் ஒரசோலை பகுதியில் காளான் உற்பத்தி செய்து வரும் மகேந்திரன் என்பவர் உடனிருந்ததும் தெரியவந்தது. வனவிலங்கை சமைத்து சாப்பிட்ட குற்றத்துக்காக 2 பேரையும் வனத்துறையினர் நேற்று கைது செய்து கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி குன்னூர் கிளைச் சிறையில் அடைத்தனர். தலைமறைவான மகேந்திரனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.