ஆந்திரா கோயில் திருவிழாவில் பரபரப்பு: தடியால் அடித்துக்கொள்ளும் ஊர்வலத்தில் 2 பேர் பலி; 100 பேர் காயம்
திருமலை: ஆந்திராவில் மாலா மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடந்த தடியால் அடிக்கும் சம்பிரதாய ஊர்வலத்தில் 2 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹோலசகுண்டா அடுத்த தேவரகட்டுவில் உள்ள 800 அடி உயர மலையில் மாலா மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி (தசரா) நாளில் பன்னி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா ஊர்வலத்தில் 3 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஒரு தரப்பிலும், 7 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றொரு தரப்பிலும் சுவாமி சிலைகளை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக கம்புகளுடன் திரண்டு சம்பிரதாயத்துக்காக சண்டையிடுவார்கள். இந்த வினோத திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
அதன்படி இந்த ஆண்டின் பன்னி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி மலையில் உள்ள மாலா மல்லேஸ்வர சுவாமி கோயிலில் அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. அதன்பிறகு நேற்றிரவு சுவாமி ஊர்வலம் தொடங்கியது.இதில் சுவாமி சிலைகளை எடுத்துச்செல்ல போட்டிபோடுவதுபோல், நெரானி, நெரானிகிதண்டா மற்றும் கோத்தபேட்டா கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஒருபுறமும், அரிகேரா, அரிகேரதண்டா, சுலுவாய், எல்லார்தி, குருகுண்டா, பிலேஹால் மற்றும் விருபபுரம் கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மறுபுறமும், தடிகளால் சம்பிரதாயத்துக்காக சண்டை போட்டுக்கொண்டே சென்றனர். இதனால் பலர் காயம் அடைந்தனர். அந்த இடம் ரத்தகளறியாக மாறியது.
பின்னர் சுவாமி சிலைகள் பசவன்னகூடுவை அடையும்போது சண்டை நிறுத்தப்பட்டது.
இந்த சம்பிரதாய உற்சவ மோதலில் 2 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அவர்கள் அதோனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் காயமடைந்த பல பக்தர்கள் காயத்துக்கு மஞ்சள் பூசிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.