லஞ்சம், விபத்து புகாரில் சிக்கிய 2 நீதிபதிகள் பணிநீக்கம்: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி
மும்பை: கடுமையான முறைகேடு புகார்களின் அடிப்படையில் இரண்டு கீழ் நீதிமன்ற நீதிபதிகளை மும்பை உயர்நீதிமன்றம் பணிநீக்கம் செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த தனஞ்செய் நிகாம் என்பவர், மோசடி வழக்கொன்றில் கைதான நபருக்கு ஜாமீன் வழங்க இரண்டு இடைத்தரகர்கள் மூலம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதித்துறை லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் லஞ்சம் கேட்டது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், குற்றத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி கடந்த மார்ச் மாதம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த பின்னணியில், தற்போது தனஞ்செய் நிகாமை பணிநீக்கம் செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், பால்கர் மாவட்ட மூத்த சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்த இர்பான் ஷேக்கும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பையில் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவராக பணியாற்றியபோது, கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இர்பான் ஷேக், அவை ‘அடிப்படை ஆதாரமற்றவை’ என்றும், தனது பணிநீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் கூறியுள்ளார். நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த, நேர்மையற்ற செயல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.