மக்களை அச்சுறுத்தும் காட்டு யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு
பாலக்காடு: பாலக்காடு அருகே மக்களை அச்சுறுத்தி வரும் பி.டி. 5 காட்டு யானையை பிடிப்பதற்காக வயநாட்டிலிருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு, மலம்புழா, கஞ்சிக்கோடு, வாளையார், கொட்டேக்காடு, சுள்ளிமடை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பி.டி. 5 என்று அழைக்கப்படும் காட்டு யானை சுற்றித்திரிகிறது. இந்த யானை தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை, பாக்கு மற்றும் ஊடுப்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியிலுள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல அச்சமடைந்து வருகின்றனர். இந்த பி.டி. 5 யானையை பிடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக வயநாட்டிலிருந்து பரதன், விக்ரம் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்துள்ளனர். இன்று முதல் பி.டி. 5 பிடிக்கும் வேட்டையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.