சென்னை ஏர்போர்ட்டில் 267 கிலோ தங்க கடத்தல் வழக்கில் முக்கிய நபரை கைது செய்வதில் தொடரும் தயக்கம்
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் கடந்த 2024ம் ஆண்டு, ஜூன் மாதம் மிகப்பெரிய அளவில் ரூ.167 கோடி மதிப்பில், 267 கிலோ தங்க கடத்தல் சம்பவத்தினால் பரபரப்பு நிலவியது. இந்த கடத்தல் தங்கம், துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் கடத்தி வரப்பட்டு, பன்னாட்டு விமான முனையத்தில் உள்ள பரிசுபொருள் விற்பனை கடையில் மறைத்து வைத்து, ரகசியமாக வெளியில் எடுத்து செல்லப்பட்டுள்ளது என சுங்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில், பரிசுபொருள் விற்பனை கடை ஊழியர்கள் 7 பேர், ஒரு இலங்கை பயணி, பரிசுபொருள் கடையை நடத்தி வந்தவர் என 9 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும், சிறையில் அடைக்கப்பட்ட 7 கடை ஊழியர்கள் சில நாட்களில் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர்.
இலங்கை பயணி மற்றும் பரிசுபொருள் கடை நடத்தியவர் ஆகிய 2 பேர் மட்டும் ஜாமீனில் வெளிவர முடியாத காபிபோசா சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். எனினும், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி ஒருவரை இதுவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டு விமானங்கள் மூலம் கடத்தி வரப்பட்ட 267 கிலோ கடத்தல் தங்கத்தில், இதுவரை ஒரு கிராம்கூட பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது, இவ்வழக்கின் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு தங்க கடத்தல் சம்பவம் நடந்ததும், விமானநிலைய தரைதளத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதேபோல், சென்னை விமானநிலைய வளாகத்தில் உள்ள பரிசுபொருள் கடை உள்பட அனைத்து கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் தீவிர கண்காணிப்பு நடந்தது. எனினும், இவற்றை சிசிடிவி காமிராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்க விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் எவ்வித வசதிகளும் இல்லை. எனவே, இவ்வசதிகளை ஏற்படுத்தி தரும்படி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் சுங்கத்துறை சார்பில் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றால், பிசிஏஎஸ் எனும் பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, இப்பிரச்னையை கிடப்பில் போட்டுவிட்டனர்.
இதனால் சென்னை விமானநிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள், சந்தேகிக்கும் பயணிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள், விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று, அவர்களின் உதவியுடன் சந்தேக பயணிகளை கண்காணிக்கும் அவலநிலை உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைபொருள், வன உயிரினங்கள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்திய விமானநிலைய ஆணையத்தால் இயக்கப்படும், கொல்கத்தா விமான நிலையம், தனியாரால் நிர்வகிக்கப்படும் ஐதராபாத், பெங்களூர், டெல்லி ஆகிய விமான நிலையங்களில் சுங்கத்துறையினருக்கு தனியே சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாடு அறை வசதி உள்ளது. எனினும், சென்னை விமானநிலைய சுங்கத்துறைக்கு அனுமதி கொடுப்பதில் மட்டும் இந்திய விமானநிலைய ஆணைய அதிகாரிகள் தயங்குவது ஏன் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.