பாஜகவில் புதிதாக அறிவிக்கப்பட்ட 25 பிரிவுகளின் அமைப்பாளர்கள் கூட்டம்
சென்னை: தமிழக பாஜவில் மாநில அளவிலான பிரிவுகளுக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, தொழிற்பிரிவு அணி, கல்வியாளர் அணி, மீனவர் அணி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு அணி என 25 அணிகளுக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய அமைப்பாளர்களின் முதல் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பாஜ அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், அனைத்து அணிகளின் பொறுப்பாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மாநில நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். மேலும் அணியின் செயல்பாடு குறித்தும் விளக்கி கூறினர். மேலும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மகனும், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில அமைப்பாளர் நயினார் பாலாஜி, விருந்தோம்பல் பிரிவின் பொறுப்பாளர் ஜி.கே.சுரேஷ் கர்ணா உள்பட அனைத்து பிரிவுகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், வரும் 25ம் தேதி அனைத்து பிரிவுகளின் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.